“பெரியார், காமராஜர் பற்றி விஜய் 10 நிமிடங்கள் பேச முடியுமா?” – சீமான்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், தமிழ்த் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“குஜராத் கலவரத்தை திமுக தான் ஆதரித்தது. அது அந்த மாநில பிரச்சினை என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆபரேஷன் சிந்தூரைக்கு முதலில் ஒப்புதல் அளித்தவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். இதை ஆதரித்து ரஷ்யாவிற்கு சென்று பேசியவர் கனிமொழி எம்.பி. இவற்றை பார்த்தால் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள் யார் என்பதை அறியலாம்.
இப்படி இருக்கும்போது என்னை ஏன் பாஜகவின் ‘பி டீம்’ என்று சொல்கிறார்கள்? தவெக தலைவர் விஜய் எந்தக் கொள்கையும் இல்லாதவர். பெரியார், காமராஜர், வேலுநாச்சியாரை தான் கொள்கையாளர்களாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். ஆனால், அவர்களைப் பற்றி விஜய்க்கு 10 நிமிடங்களாவது பேசத் தெரியுமா?
பாஜக கொள்கை எதிரி; திமுக அரசியல் எதிரி என்கிறார் விஜய். அப்படியெனில் அதிமுக, காங்கிரஸ் உங்களுக்கு எதிரிகள் அல்லவா? திடீரென வந்து ‘திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றே’ என்கிறார். தமிழர்கள் அல்லாதவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடம் உருவானது.
முஸ்லிம்கள் ‘திமுக தான் பாதுகாப்பு’ என நம்புகிறார்கள். ஆனால் திமுக உண்மையில் உங்களைப் பாதுகாக்கிறதா? அல்லது, நீங்கள் திமுகவைப் பாதுகாக்கிறீர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” என சீமான் தெரிவித்தார்.