“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?” – திருச்சி பொதுக்கூட்டத்தில் விஜய் கேள்வி
“திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? நிறைவேற்றாத திமுகவுக்குத்தானா மீண்டும் உங்கள் ஓட்டு செல்ல வேண்டும்?” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது உரையை சுருக்கமாக நிறுத்தினார்.
திருச்சியில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயை, காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததிலிருந்து வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் வரையிலும் திரண்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து வெளியே வர விஜய்க்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆனது.
காலை 10.35 மணிக்கு மரக்கடையில் பேச்சு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் பெருந்திரளாகச் சென்றதால், அங்கு சென்றடைந்து உரையாற்றுவதற்கு அவருக்கு ஐந்து மணி நேரத்துக்கும் மேலானது.
அங்கு உரையாற்றிய விஜய்,
“முன்னொரு காலத்தில் போருக்குச் செல்லும் முன் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு செல்வார்கள். அதுபோலவே அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பயணத்தை திருச்சியில் தொடங்குகிறேன். எம்ஜிஆர் தனது முதல் மாநாடு நடத்திய இடம் திருச்சி. அண்ணா அரசியலில் களம் இறங்க விரும்பிய இடம் திருச்சி. பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த மண் திருச்சி. மதச்சார்பின்மையின் அடையாளமான இந்த நிலம், பல திருப்புமுனைகளைப் பெற்றுள்ளது.
டீசல் விலை 3 ரூபாய் குறைப்பு, கல்விக் கடன் ரத்து, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம், 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புவது போன்ற வாக்குறுதிகள் எங்கே? மக்கள் கேட்கிறார்கள், ஆனால் பதில் எதுவும் இல்லை.
மகளிர் உதவித் தொகையும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அரசு உதவியைச் செய்வது போல காட்டி, மக்களை அவமதிக்கிறது. சொன்னீர்களே, நிறைவேற்றினீர்களா? வாக்குறுதிகளைச் செயல்படுத்தாத திமுகவுக்குத்தானா மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
பின்னர் உள்ளூர் பிரச்சினைகள், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டினார். ஆனால், மைக் மற்றும் ஒலி ஒளிபரப்பு கருவிகளில் ஏற்பட்ட கோளாறால், அவரது உரை முழுமையாக ஒலிபரப்பப்படவில்லை. இதனால் விஜய் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.