விஜய்யின் திருச்சி தேர்தல் பிரச்சாரம்: போக்குவரத்து சிக்கலால் பொதுமக்கள் பாதிப்பு – நடந்தது என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று (செப்.13) திருச்சியில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலும், போக்குவரத்து தடங்கலும் பொதுமக்களை பெரிதும் அவதிக்கு உள்ளாக்கியது. காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்ட விஜய், காலை 9.40 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை காண ரசிகர்கள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தை நோக்கி திரண்டனர். விஐபி லாஞ்ச் அருகே செல்ல முடியாதபடி போலீஸார் தடுப்பு வைத்திருந்தாலும், கூட்டம் தடைகளை உடைத்து முன்னேற முயன்றது.

விஐபி லாஞ்சில் இருந்து வெளியே வந்த விஜய், ரசிகர்களை கையசைத்து வரவேற்றார். இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் அவரை நோக்கி ஓடினர். அப்போது குறைந்தளவு போலீஸாரே இருந்ததால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது.

விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டவுடன், அதைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சாலையை முடக்கியதால் வாகனம் மெதுவாக மட்டுமே நகர்ந்தது. இதனால் விமான நிலையம் உள்ளேயும், வெளியேயும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் சிரமத்தில் சிக்கினர்.

விஐபிக்கள் அடிக்கடி வரும் திருச்சியில் வழக்கமாக 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால் விஜய்யின் இன்றைய நிகழ்ச்சியில் வெறும் 600 போலீஸாரே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. கூட்ட கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் போன்ற பணிகளில் ஆர்வம் குறைவாக இருந்ததால், நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் காலை முதல் மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய்யை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், மாணவர்கள் என பெரும் திரள் காலை 8 மணி முதலே திரண்டு நின்றனர். உற்சாகக் காட்சிகளோடு கூடிய இந்த காத்திருப்பில், தண்ணீர் வசதி இல்லாததால் பலர் மயக்கம் அடைந்தனர்.

மரக்கடையில் நடைபெற்ற பிரச்சார இடம் வரை, கூட்ட நெரிசலில் சிக்கியதால் 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் சாலையில் சிதறிக் கிடந்தன. பெண்கள், இளம்பெண்கள், பள்ளி மாணவர்கள் கூட அதிக அளவில் திரண்டிருந்தது. சிலர் தங்கள் குழந்தைகளையும் கூட்ட நெரிசலைப் பொருட்படுத்தாமல் கொண்டு வந்தனர். இதனால் பாதுகாப்பு குறைவால் ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.

Facebook Comments Box