“விஜய்யைச் சுற்றி கூடும் கூட்டம், மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வை வெளிப்படுத்துகிறது” – கிருஷ்ணசாமி

“ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையால் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வின் பிரதிநிதியாக விஜய் இருக்கிறார். அதனால்தான் பெண்களும் இளைஞர்களும் பெரும் திரளாக கூடுகிறார்கள். விஜய் மட்டும் தனித்து ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை. நல்ல கூட்டாளர்களைச் சேர்த்துக்கொண்டால், அவரது தேர்தல் வியூகத்திற்கு வலிமை கிடைக்கும்” என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“1967க்குப் பின் தமிழகத்தில் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியே, விஜய் நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும் கூட்டமாக வெளிப்படுகிறது. இது, மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையின் வெளிப்பாடாகும். ஆனால், அந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது விஜய்யின் திறமைக்கும், அவரின் கட்சியின் தேர்தல் வியூகத்திற்கும் சார்ந்தது.

விஜய் மட்டும் தனியாக ஆட்சி அமைப்பது கடினம். ஆனால் நல்ல கூட்டணியை அமைத்தால், தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகள் இயங்குகின்றன. அதுபோலவே தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம்.

இன்றைய அமைச்சர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்கள் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு பெற்றால்தான் அடித்தட்டு மக்களின் சிக்கல்கள் தீரும். இது வெறும் கோஷமல்ல, 2026 தேர்தல் நோக்கமாகும்.

இன்றைக்கு தமிழகத்தில் பொருளாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளது. சமூக வேறுபாடுகள் குறைந்தாலும் பொருளாதார வேறுபாடு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் உண்மையான நிலையை முதலமைச்சரிடம் கூறுவதில்லை. இதனால் மக்கள் கடும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. வரும் ஜனவரி மாதம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். தற்போதைய அரசு மக்கள் விரோதமான திட்டங்களை செயல்படுத்துகிறது. இது தொடர்ந்தால் பெரிய புரட்சி வெடிக்கும்.

ஆட்சியில் அதிகாரம் சிலருக்கே குவிந்தால் மக்களிடையே அதிருப்தி உருவாகும். அதன் விளைவாக 2026 தேர்தலில் மாற்றம் வரும்.

செங்கோட்டையன் விவகாரம் அதிமுக உள்கட்சி பிரச்சினை; அதை அவர்கள் தாமே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

தென் தமிழகத்தில் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவை வளர்ச்சியடையவில்லை. வடதமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் போல முன்னேற்றம் எட்டப்படவில்லை. தென் மாவட்டங்களில் தொழில்துறை வந்தால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், வெளியூர்வாசிகளுக்கே வேலை வாய்ப்பு தரப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு குறைந்தது 50 முதல் 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்காக வரும் 26ஆம் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தென் மாவட்டங்களில் தொழில்துறை இல்லாமல், வேளாண்மையும் சரிவர இயங்காததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை திட்டமும் முறையாக வழங்கப்படவில்லை. அதில் பெரிய முறைகேடுகள் உள்ளன. எனவே மத்திய அரசு விசாரணைக் குழுவை அமைத்து, திட்டம் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box