இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் இன்று தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில், அவர் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 2018 முதல் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த மு.வீரபாண்டியன், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி இயக்கங்களில் சிறப்பான பங்கு வகித்தவர். மேலும், இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், 2015 முதல் தொடர்ந்து மூன்று முறை மாநிலச் செயலாளராக இருந்த முத்தரசன், இப்பொறுப்பை வகித்து வந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில்,

“40 ஆண்டுகளாக பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்களுக்காக போராடி வரும் தோழர் மு.வீரபாண்டியன் தற்போது மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக உழைப்பாளி மக்களின் நலனைப் பாதுகாக்கவும், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தவும், மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.வீரபாண்டியனுக்கு எனது வாழ்த்துக்கள். இயக்கத்தை சிறப்பாக வழிநடத்திய முத்தரசனுக்கு நன்றிகள். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக இடதுசாரி அரசியலில் இணைந்து முன்னேறுவோம்” என்று கூறினார்.

Facebook Comments Box