தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு – சென்னை மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு, டெண்டர் வெளியீடு

சென்னை மாநகராட்சி, தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து, உணவு வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரியுள்ளது.

நகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படுத்தியதை எதிர்த்து, அந்த மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் போராட்டம் நடத்தியனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்காக 6 சிறப்பு நல திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதில், பணியில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும், நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு நகராட்சிகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் போன்ற திட்டங்கள் அடங்கும்.

இதன்படி, சென்னை மாநகரில் தினசரி பணியாற்றும் 10,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளைகளில் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.50 கோடி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், டெண்டர் வெளியிடப்பட்டு, உணவு தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Facebook Comments Box