இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 தம்பதிகளுக்கு திருமணம் – உதயநிதி நேரில் வாழ்த்து

சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்த திருமண விழாவில், 32 தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களுக்கு பரிசுப் பொருட்களையும், சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“இந்த ஆண்டு மட்டும் 1000 தம்பதிகளுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பதே அறநிலையத்துறையின் இலக்கு. அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் சுமார் 775 தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இன்று நடைபெறும் திருமணங்களும், மாநிலம் முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும் மூலம், அந்த இலக்கு நிறைவேறியுள்ளது.

இன்றைய திருமணங்களில் பெரும்பாலானவை காதல் திருமணங்களாக உள்ளன. அதனால், இது அறநிலையத்துறையா, அன்புநிலையத்துறையா எனச் சொல்லத்தக்க அளவுக்கு காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. மணமக்கள் அனைவரும் நன்றாகப் படித்தவர்கள் என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

50–60 வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. அப்போது மணமக்களின் கல்விப் பட்டங்கள் அல்லாது, சாதி பெயர்களே திருமண அழைப்பிதழ்களில் இருந்தன. ஆனால் இன்று, கல்விப் பட்டங்கள்தான் குறிப்பிடப்படுகின்றன. இது தமிழ்நாட்டின் பெருமை.

இந்த முன்னேற்றத்திற்கு திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் காரணம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்த சீர்திருத்தப் போராட்டங்களின் பயனாகவே இன்று நாம் இவ்வளவு முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம்.

மகளிர் மேம்பாட்டுக்காக முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமானவை மகளிர் விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப்புதல்வன் – புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் ஆகியவை.

இந்த திட்டங்களால் பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் என பலர் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு 11.19% வளர்ச்சியுடன் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்பதும் பெருமை.

அதேபோல், அறநிலையத்துறை கடந்த நான்கரை ஆண்டுகளில் 3700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளது. ஆயிரக்கணக்கான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிமன்றம் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

திராவிட மாடல் அரசின் சாதனைகள் சிலருக்கு பொறாமை தருகின்றன. ஆனால் எப்போதும் மக்கள் பக்கபலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இறுதியாக, மணமக்களுக்கான என் அறிவுரை: ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையுடன் குடும்பத்தை நடத்துங்கள். உரிமைகளை கேட்டுப் பெற்று, விட்டுக்கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக்கொடுத்து, உறுதியுடன் வாழ்க்கையை வாழுங்கள். முக்கியமாக, பிறக்கும் குழந்தைக்கு ஆண், பெண் எதுவாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Facebook Comments Box