கிருஷ்ணகிரியில் புதிய 11வது ஊராட்சி ஒன்றியம் – ‘அஞ்செட்டி’ அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை அறிவித்தார். இதனால், தளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் குறையும் எனவும் தெரிவித்தார்.
விழாவில் ரூ.270.75 கோடி மதிப்பிலான 193 பணிகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.562.14 கோடி மதிப்பிலான 1,114 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. கூடுதலாக, 2.23 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,052.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், கெலமங்கலம் பகுதிக்கான முக்கிய அறிவிப்புகளாக:
- ரூ.12.43 கோடி மதிப்பில் மலை கிராமங்களுக்கு புதிய சாலை பணிகள்,
- கெலமங்கலம் புறவழிச்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை,
- ஓசூரில் என்.எச்.44 மற்றும் என்.எச்.844 இணைக்கும் புதிய சாலை சாத்தியக்கூறு அறிக்கை,
- எல்சிஇ 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுவரை 10 ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், தற்போது ‘அஞ்செட்டி’ மூலம் 11வது ஒன்றியத்தை பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, எம்எல்ஏக்கள், எம்பி கோபிநாத், மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.