“மத்திய அரசு வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு தரவில்லை” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:
“தமிழக கல்வித் துறை வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு ஏற்கெனவே கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ளது. ஆனால் அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான சரியான கணக்கை தமிழக அரசு தரவில்லை. அதற்கான ரசீதுகளை வழங்க மறுக்கிறது. இதை மறைக்கவே, மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுக்கான நிதியை மத்திய அரசு தருவதில்லை என தவறாக பேசுகிறார். ஆனால் உண்மையில் மத்திய அரசு இதுவரை இல்லாத அளவிற்கு நிதி வழங்கியுள்ளது.
தமிழகப் பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்களுக்கு தேர்தல் காலத்தில் திமுக அரசு அளித்த வாக்குறுதிகள், 4.5 ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. கேள்வி எழுப்பினால், ‘மத்திய அரசு பணம் தரவில்லை’ என்ற ஒரே காரணத்தை கூறி தப்பிக்க முயல்கிறது.
அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமெனில், வழங்கப்பட்ட நிதி செலவின விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை தமிழக அரசு செய்யவில்லை. இருந்தும் மத்திய அரசையே குற்றம் சாட்டி வருகிறது.
அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, அரசே சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் தகுந்த முறையில் வழக்கை நடத்த வேண்டும். அதை செய்யாமல், நீதிமன்றத்தை காரணம் காட்டி எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்?” என்று வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினார்.