இன்று நிறைவடையும் அவகாசம் – செங்கோட்டையன் நல்ல தகவல் தருவார் என ஓபிஎஸ் பேட்டி

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

“செங்கோட்டையன் அறிவித்த காலக்கெடு இன்று முடிவடைகிறது. அவர் விரைவில் நல்ல செய்தி அறிவிப்பார் என்று நம்புகிறேன். சசிகலாவை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது, விரைவிலேயே சந்திப்பேன். சந்திக்கும் முன் உங்களிடம் தெரிவித்துவிடுவேன்.

விஜய்யுடன் கூட்டணி பற்றி நான் ஏற்கனவே விளக்கமளித்துள்ளேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அது நல்ல விதமாகவே இருக்கும். டெல்லி செல்லும் எண்ணமோ திட்டமோ எனக்கு இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சந்திக்க வேண்டும் என்று கூறினார். நிச்சயமாக சந்திப்போம் என பதில் கூறியுள்ளேன்.

டிடிவி தினகரன் கூறியபடி, ‘எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்’ என்ற கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

கடந்த மாத ஆரம்பத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், “அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி முன்னேற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை 10 நாட்களில் மேற்கொள்ளாவிட்டால், செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் நாங்களே இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பிற்குப் பிறகு, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. பின்னர் டெல்லி சென்ற அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசியதாகவும், அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்ப்பதில் அமித் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையன் அறிவித்த அவகாசம் இன்று நிறைவடைய உள்ள நிலையில், அதிமுகவில் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்னவாகும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

Facebook Comments Box