மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் கணக்கில் செலுத்தல் – ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் வெளிச்சம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த மகேஸ்வரியின் (50) மகளிர் உரிமைத்தொகை, கடந்த இரண்டு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கில் அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகேஸ்வரி, 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கான உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வராததால், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக நினைத்துள்ளார்.
இந்த நிலையில், ஜூலை 25 அன்று கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் மனு அளித்தார். அதனை ஆய்வு செய்த அதிகாரிகள், “உங்களுக்கு 2 ஆண்டுகளாகவே தொகை வழங்கப்பட்டு வருகிறது, வங்கி கணக்கைச் சரிபாருங்கள்” என தெரிவித்தனர்.
பின்னர் மகேஸ்வரி பரோடா வங்கியில் விசாரிக்கையில், அவரது ஆதார் எண் தவறுதலாக உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்ற பெண்ணின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணின் கணக்கில் மாதந்தோறும் உரிமைத்தொகை செலுத்தப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது தொடர்பாக கிணத்துக்கடவு தாலுகா சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பானுமதி தெரிவித்ததாவது:
“மகளிர் உரிமைத்தொகை சென்னையிலிருந்து நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தவறுதலாக இணைக்கப்பட்ட ஆதார் விபரத்தைச் சரிசெய்து, மகேஸ்வரியின் வங்கிக் கணக்கில் உரிய தொகையை வரவு வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.