தடுப்பூசி போட்டும் 40 நாளில் ரேபிஸ் தாக்கம் – ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னையில், தெருநாய் கடித்ததால் தடுப்பூசி போட்டும், 40 நாட்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (50) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகே ஆட்டோவை எடுக்கச் சென்றபோது, அதின் கீழே படுத்திருந்த தெருநாய் ஒன்று திடீரென அவரை கடித்தது. உடனே அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்.

ஆனால், செப்டம்பர் 12-ஆம் தேதி காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு சென்ற நஸ்ருதீனுக்கு, ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தண்ணீர் குடிக்க முடியாமலும், உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, ராயப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் லட்சுமி (65) என்பவரை, அக்கம் பக்கத்தினர் வைத்திருந்த நாய் திடீரென கடித்துள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Facebook Comments Box