திமுக அரசை கண்டித்து மண்டல வாரியாக தமாகா ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
திமுக அரசின் செயல்களை எதிர்த்து மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னை கவிக்கோ அரங்கில், மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சி முகாம் தமாகா சார்பில் நடைபெற்றது. இதன் தலைவராக ஜி.கே.வாசன் இருந்தார்.
மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 60 பேச்சாளர்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவில் சான்றிதழ் வழங்கிய பின்னர் ஜி.கே.வாசன், “தமாகாவின் கொள்கைகளை பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை வெளிப்படுத்தி, தமாகா கட்சியின் சிறப்பையும், மறைந்த தலைவர்கள் ஜி.கே.மூப்பனார், காமராஜர் ஆகியோருடைய நல்ல சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
மேலும், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யவும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுக அரசின் அராஜகத்தையும் கடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்தரங்குகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பணிகளை சார்பு அணிகள் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் விடியல் எஸ்.சேகர், ஏ.எஸ்.முனவர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.