வக்பு சட்டத்தில் கடுமையான விதிகளுக்கு தடை: தவெக வரவேற்பு

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, அரசியலமைப்பின் விழுமியங்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதில் மிகப் பெரிய வெற்றி என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“வக்பு திருத்தச் சட்டம் 2025 குறித்த உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் தீர்ப்பு, நீதி, அரசியலமைப்பின் அடிப்படை சிந்தனைகள் மற்றும் உரிமைகளை காக்கும் முக்கியமான வெற்றி. தமிழக வெற்றிக் கழகத்துடன் சேர்ந்து பலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நியாயம், சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் சில விதிகளை இடைக்காலமாக நிறுத்தியுள்ளது.

வக்பு வாரியத்துக்கு சொத்து அளிக்க ஒருவர் கட்டாயமாக 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதை உறுதிப்படுத்த வருடக் கணக்கில் எவ்வித நிபந்தனையும் இல்லை என்பதால், அரசின் இவ்விதி தன்னிச்சையானதும் அரசியலமைப்புக்கு முரணானதும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசு சொத்தா என்பதை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும் என்ற விதியையும் நீதிமன்றம் நிறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய வக்பு நிலம் குறித்து, தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை அதன் நிலை பாதிக்கப்படாது; மூன்றாம் தரப்பினர் அதற்கு உரிமை கோர முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்க்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வெற்றியை அடைய பெரும் பங்களிப்பு செய்த சட்டக்குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box