‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை

மத்திய அரசில் இருக்கும் பாஜக, நமக்கு ஆட்சிக் காலத்திலும் சரி, இப்போதும் சரி எந்தவித அச்சுறுத்தலும் தரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் திங்கட்கிழமை (செப். 15) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, தனது ஆட்சிக் கால நெருக்கடிகள், பாஜக உடனான கூட்டணி, உட்கட்சி பிரச்சினைகள் குறித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது:

“வரும் 16ஆம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை இருக்கும். இதனால், தருமபுரியில் 17, 18ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எழுச்சி பயணம், மழை காரணமாக இந்த மாதம் 28, 29ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், உடனடியாக பத்திரிகைகளில் ‘இபிஎஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்; உள்கட்சி பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்’ என்று செய்திகள் வெளியானது. பத்திரிகையாளர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

எங்களுக்குப் பதவி முக்கியமல்ல; தன்மானம்தான் முக்கியம். அதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம். சிலரை கைக்கூலியாக வைத்து ஆட்டம் போடுகிறார்கள்; அவர்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சிலர் அதிமுக அரசை கவிழ்க்க முயன்றார்கள். அவர்களை மன்னித்து துணை முதல்வர் பதவியளித்தோம். இருந்தும் திருந்தவில்லை. தலைமை கழகத்தை உடைத்தார்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அது தொண்டர்களின் சொத்து.

மற்றொருவர் 18 எம்எல்ஏக்களை கடத்திச் சென்றார். அவரையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? இதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? நான் தொண்டனாக இருந்து உயர்ந்தவன். எனக்கு உறுதியான மனநிலை, அஞ்சாத நெஞ்சம் உண்டு. என்னை யாரும் விரட்ட முடியாது.

இத்தனைக்கும், கடந்த காலத்திலும் அதிமுக ஆட்சியிலும், இன்றும் கூட மத்திய அரசில் இருப்பவர்கள் எவரும் நமக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை. மாறாக நன்மையே செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் கட்சியை கைப்பற்ற முயன்றார்கள். ஆனால் அதிமுக ஆட்சியை மத்தியவர்கள் காப்பாற்றினர். நன்றியை மறப்பது நன்றல்ல; அதையே வள்ளுவர் சொன்னார். அதனால், மத்திய பாஜக அரசுக்கு நன்றியுடன் இருக்கிறோம். அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். இது அரசியல் வியூகமாகும்; தேர்தல் சார்ந்த நகர்வாகும்; எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதே நோக்கம்.

திமுக 1999, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது பேசாதவர்கள் இப்போது ஏராளமாக பேசுகின்றனர். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.

மத்திய பாஜக நமக்கு எந்தத் தொந்தரவும் தரவில்லை; மாறாக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி, நிதியுதவி செய்து வருகின்றனர். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக தவறாக பேசுகிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Facebook Comments Box