பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரை இடையூறு இல்லாமல் கல்வியை தொடர, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதன் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர்,

“இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். அதனால் திமுக இன்று மக்களின் குரலாக ஒலிக்கிறது. மக்களுக்குத் தேவையான மாற்றங்களை ஆட்சிப் பொறுப்பை பயன்படுத்தி செய்து வருகிறோம். எங்களுக்குப் பொருத்தவரை அரசியலில் சொகுசு என்பதே இல்லை. பொறுப்பே முக்கியம்.

குழந்தைகள் பசியுடன் பள்ளிக்கு செல்லக் கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இப்போது 21 லட்சம் குழந்தைகளுக்கு தினமும் சத்தான சூடான உணவு வழங்கப்படுகிறது. இது வாக்கு அரசியலுக்காக அல்ல; மக்களின் நம்பிக்கைக்கு உரிய கொள்கையாகும்.

‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு உட்பட 18 வயது வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தொடர்ந்து கல்லூரிக் கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

எல்லோரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம். மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசியல்வாதி என உயர்ந்து சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெற்றோரை இழந்து 12ஆம் வகுப்பு முடித்து, அரசின் முயற்சியால் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள 1,340 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box