பாமக தலைவராக அன்புமணி தொடர்வார்: தேர்தல் ஆணையக் கடிதத்தை காட்டி வழக்கறிஞர் பாலு தகவல்
பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி கடிதம் வழங்கியுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். மேலும், மாம்பழச் சின்னம் பாமகவுக்கே ஒதுக்கப்பட்டதாகவும், வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அன்புமணிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து கடிதம் வழங்கியுள்ளது. அந்தக் கடிதப்படி, 2026 ஆகஸ்ட் 1 வரை அன்புமணி தலைவராகவும், வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் ஏனைய நிர்வாகிகளும் தொடர உள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் என்பதில் எந்த மாற்றும் இல்லை. ஆனால், கட்சியில் அன்புமணியை ஏற்றுக்கொண்டவர்களுக்கே பாமக கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமை உண்டு. மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ராமதாஸ் விட்டு சென்ற இலட்சியங்களை அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம். பாமகவில் பிரிவுகள் இல்லை; ஒரே அணி தான். சிறிய குழப்பத்தால் முன்பு இரண்டு அணிகளாக இருந்தனர். இப்போது தேர்தல் ஆணையக் கடிதம் வந்துள்ளதால் அனைவரும் அன்புமணியின் தலைமையை ஏற்று சேர வேண்டும். பாமகவை வலிமையாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கட்சியின் சின்னம், கொடி ஆகியவை அன்புமணி தலைமையிலான நிர்வாகிகளுக்கே சொந்தம். பிறர் பயன்படுத்துவது தவறு. தேர்தல் ஆணையத்துக்கு இதை அங்கீகரிக்கும் அதிகாரம் உள்ளது. அதன்படியே இந்தக் கடிதமும், சின்னமும் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை: எம்எல்ஏ அருள் விளக்கம்
இதுகுறித்து பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்ததாக வழக்கறிஞர் பாலு கூறுகிறார். அந்தக் கடிதத்தில் மாம்பழச் சின்னம் பாமகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது எனக் காண்பித்துள்ளார். ஆனால் பாமக அலுவலக முகவரி, ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றப்பட்டு அந்தக் கடிதம் பெற்றுள்ளனர்.
மேலும், அந்தக் கடிதத்தில் எங்கும் அன்புமணி தான் தலைவர் என்று குறிப்பிடப்படவில்லை. பாமக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே உள்ளது. சட்டப்படி, தேர்தலில் 2% வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மட்டுமே தொடர்ச்சியாக அதே சின்னம் வழங்கப்படும். அந்த அடிப்படையில், தற்போது மாம்பழச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.