“ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் பிரேமலதா அதிருப்தி
“எல்லா கட்சிகளும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் தேவை,” என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டுமே பூத் கமிட்டிகள் உள்ளன. பெரிய தலைவர்களுக்கு மக்கள் கூடுவது இயல்புதான். விஜயகாந்துக்கும் அதிக கூட்டம் குவிந்தது. தற்போது விஜய்க்கும் அப்படியே கூட்டம் திரண்டு வருகிறது. விஜய் அந்தக் கூட்டத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
திமுக, பாஜகவை விஜய் எதிர்த்து வருகிறார். அதனால் அவர்கள் விமர்சிப்பது சகஜம். எல்லா கட்சிகளும் எங்களது நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் தேவை. விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களது கட்சியின் வளர்ச்சியில் தான் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
தஞ்சாவூர் அதிருப்தி:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரேமலதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவனேசன் வரவேற்றார். பொருளாளர் எல்.கே. சுதீஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா:
“இந்தக் கூட்டம் தொடர்பான அழைப்பிதழில் எத்தனை பேருடைய பெயர்கள் உள்ளன? ஆனால் அதற்கு ஏற்ற அளவுக்கு கூட்டம் இல்லை. உங்க பிசினஸையும், குடும்பத்தையும் எப்படி கவனிக்கிறீர்களோ, அதே மாதிரி கட்சியையும் கவனிக்க வேண்டும்.
பதவி மட்டும் பிடிக்க வேண்டும், ஆனால் வேலை செய்யக்கூடாது என்றால் அப்புறம் அந்தப் பதவி எதற்காக? ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மண்டபத்தில் 500 பேர் மட்டுமே இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளரிடம் கேட்டால், இன்று திங்கள் என்பதால் சிலர் வரவில்லை, வேலைக்கு சென்றுவிட்டார்கள் என்றார். அப்போ இங்கு வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வேலை இல்லையா? பள்ளி மாணவர்கள் சொல்லும் காரணம் போல இருக்கிறது,” எனக் கடும் அதிருப்தி தெரிவித்தார்.