மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு – மானாமதுரையில் கிராமத்தினர், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் உருவாகி வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை எதிர்த்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி ஆலை அமைப்புக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து சூரக்குளம், பில்லறுத்தான், செய்களத்தூர் போன்ற ஊராட்சிகளில் ஆலைக்கு எதிராக கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் கட்டுமானப் பணி தொடர, பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் பல முறை போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பல கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஆலை எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி, அமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால், மானாமதுரையில் முழுக் கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று ஆலையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்ததால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக் குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால், மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இறுதியில், ஆலையை மூட அரசுக்கு பரிந்துரை செய்யவும், இரண்டு மாதங்களில் அதற்கான உத்தரவை பெற்று தரவும், அதுவரை கட்டுமானப் பணியை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. காவல்துறை பணி நிறுத்தத்தை கண்காணிக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. நான்கு மணி நேரம் நீண்ட இந்த போராட்டத்தால் வணிகமும் போக்குவரத்தும் சீர்குலைந்தன.