“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி

உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு இனியாவது சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது. செவிலியர்களிடம் அளவுக்கு மீறிய உழைப்பை சுரண்டுகிறீர்கள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரமாக நியமிக்க மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதையும் மறுக்கிறீர்கள். இதற்காகவே தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக நீதி பேசும் திமுக அரசு, செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டியதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

தமிழக மருத்துவத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், அதை செயல்படுத்தாமல் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு விசாரணையின் போது தான் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது முற்றிலும் உண்மை. 2015 முதல் இதுவரை மொத்தம் 14,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மட்டுமே இதுவரை நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8,000 செவிலியர்கள் இன்னும் பணி நிலைப்பு பெறவில்லை.

நிரந்தர செவிலியர்களைப் போலவே பணிபுரிந்தாலும், அவர்களுக்கு மாதம் ரூ.62,000 வழங்கப்படுகின்றது. ஆனால், ஒப்பந்த செவிலியர்களுக்கு ரூ.18,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. குறைந்த பணியே செய்கிறார்கள் என்ற பெயரில் திமுக அரசு அவர்களின் ஊதிய உயர்வையும், பணி நிலைப்பையும் மறுத்துவந்தது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் உயர்நீதிமன்றம் சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. அதையும் செயல்படுத்த திமுக அரசு மறுக்கிறது.

சமூக நீதி என தொடர்ந்து பேசி வரும் திமுக அரசு, அதைப் பின்பற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு பிறகு இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அதில் 6,977 பேர் மட்டுமே மருத்துவத் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பணியாளர்கள். மீதமுள்ள 27,000 பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களே. இதுவா சமூக நீதி?

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தனது தவறை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு அல்லது ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூக நீதி என்ற சொல்லின் அர்த்தமே தெரியாததால் திமுக அரசு மேல்முறையீட்டு வழக்கை தொடர்கிறது.

இப்போதாவது தமது உழைப்புச் சுரண்டலையும், சமூக அநீதியையும் ஒப்புக்கொண்டு, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box