டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (செப்டம்பர் 16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தொடர்பான விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் அமித் ஷா இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னணி என்ன?
அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குரல் கொடுத்திருந்தார். கடந்த செப்டம்பர் 5 அன்று அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பழனிசாமிக்கு 10 நாள் அவகாசமும் வழங்கினார். அதற்கிடையில் அவர் டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்தும் வந்தார்.
இதனால், அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும் சூழலில், உட்கட்சி பிரச்சினைகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவரை அமித் ஷா சந்தித்து நேரம் ஒதுக்கியது, பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகள் இணைந்து மக்களைச் சந்திப்பது, புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைக்கும் ஆதரவு போன்ற பல்வேறு விஷயங்களும், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.