“அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி

“அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் என்பது திட்டமிட்ட மோசடி ஆகும். ஏன் முகவரியை மாற்ற வேண்டும்? பாமக நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ் தான்” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

“பாமகவை யார் தொடங்கினர், கட்சிக்கு யார் அங்கீகாரம் பெற்றுத் தந்தனர் என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். இப்போது கட்சிக்கு யார் வேண்டுமென்றாலும் உரிமை கொண்டாடலாம். பாமகவுடன் பயணிக்க விரும்புவோர் ராமதாஸுடன் இணைந்து பயணிப்பதுதான் நல்லது.

பாமக தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தி. சமூக நீதிக்காக போராடியவர், மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் ராமதாஸ். அன்புமணியையும் ராமதாஸையும் நான்தான் பிளவுபடுத்தி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள். கட்சியைப் பற்றி தெரியாத சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசுகின்றனர்.

ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை. ராமதாஸை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. பாமகவின் அலுவலக முகவரி சூழ்ச்சி செய்து, கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியில் இல்லாதவர் கட்சியின் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்? விதிகளை மீறி மாமல்லபுரத்தில் அன்புமணி தரப்பில் கூட்டிய பொதுக்குழு செல்லாது. அதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும் செல்லத்தக்கவர்கள் அல்ல.

அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் திட்டமிட்ட மோசடி. ஏன் முகவரியை மாற்ற வேண்டும்? பாமக நிறுவனர், தலைவர் எல்லாம் ராமதாஸ் தான். ராமதாஸ் இல்லாமல் வன்னியர் சங்கமோ, இடஒதுக்கீடோ இல்லை. பாமகவுக்கு ஏற்கெனவே அங்கீகாரம் இருந்தது. அது இடையில் பறிபோனது” என்றார்.

முன்னதாக, “பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் A மற்றும் B பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார்.

Facebook Comments Box