கொடிக்கம்ப விதிமுறைகள் அமல்படுத்தப்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பான அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கிய தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம், அவற்றைச் செயல்படுத்த தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்தளங்கள், மாநில-தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகினர்.

தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கொடிக்கம்பங்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட மற்றும் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளதாகக் கூறினார்.

அதன்படி, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது சாலையில் தார்ச்சாலைகள் மீது, சாலை நடுவிலான சென்டர் மீடியனில் கொடிக்கம்பம் வைக்கக் கூடாது; மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்கள் நிறுத்தப்படக்கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன எனவும் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, கொடிக்கம்பங்கள் தொடர்பான அரசாணை மற்றும் விதிமுறைகளை பாராட்டியதோடு, அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், இவை ஆளுங்கட்சியையும் சேர்த்து அனைத்து கட்சிகளுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, விசாரணையை அக்டோபர் 15க்குத் தள்ளிவைத்தார்.

Facebook Comments Box