“திமுகவுக்கு மாற்று…” – தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

“இப்போதும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்களே… ‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று. என்ன மாற்றப் போகிறார்கள்? தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை மாற்றி, பின்னுக்கு இழுத்துச் செல்லப்போகிறார்களா?” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா, திமுக தோற்ற நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது,

“திமுக எப்போதும் அச்சத்திற்கு பயப்படும் கட்சியா? இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, அரசை பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்.

75 ஆண்டுகால வரலாறு இருக்கிறது நமக்கு. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே, ‘திமுகவை அழிப்போம் – ஒழிப்போம்’ என்று சொன்னார்கள். இப்போதும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்களே… ‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று. என்ன மாற்றப் போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னுக்கு இழுத்துச் செல்லப்போகிறார்களா?

நமது கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது கூறுகிறார்களா? மாற்றம்… மாற்றம் என்று சொன்னவர்கள் எல்லோரும் மாறி மறைந்துவிட்டார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்திலிருந்து ஒருபோதும் மறையவில்லை. இதுவே தமிழ்நாட்டு அரசியல். நமது கொள்கையே நமது பலம். நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது” என்று தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் தனது உரைகளில், “தமிழகத்தில் தவெகதான் மாற்று, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் தவெகவும் தான் முக்கிய போட்டியாளர்கள்” என்று வலியுறுத்தி வருவதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

Facebook Comments Box