ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி: 15வது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்தது
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வள அமைச்சகங்கள் மூலமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மானியங்களை வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்து, நிதியமைச்சகத்தின் மூலம் அந்த நிதி ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட தொகை, ஒவ்வொரு நிதியாண்டிலும் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
தொகுப்பற்ற மானியங்களை, சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்காக அல்லாமல், அரசியல் சாசனத்தின் 11வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊரக தேவைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், தொகுப்பு மானியங்கள் தூய்மைப் பணிகள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை பராமரித்தல், வீட்டுக் கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு போன்ற சேவைகளுக்காக ஒதுக்கப்படுகின்றன.
மேலும், மனிதக் கழிவு அகற்றுதல், குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற பணிகளுக்கும் இந்த மானியம் பயன்படுத்தப்படலாம்.
இந்த வகையில், 2025-26 நிதியாண்டில், தமிழகத்தின் 2,901 தகுதி பெற்ற கிராம ஊராட்சிகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் ரூ.127.58 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.