மகளிர் சுய உதவிக் குழு அடையாள அட்டையால் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்களில் சலுகைகள்
மகளிர் சுய உதவிக் குழு அடையாள அட்டை மூலம் கோ-ஆப்டெக்ஸ், ஆவின், இ-சேவை மையங்கள் வழியாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக வரும் 9 மாதங்களுக்குள் அனைத்து சுய உதவிக் குழு பெண்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 54 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், சுய உதவிக் குழு பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது: அடுத்த 9 மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுய உதவிக் குழு பெண்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம் குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை 25 கிலோ எடையுடன் அரசு பேருந்துகளில் 100 கி.மீ. வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
அதேபோல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கும் பயிர் கடன், கால்நடை கடன், சிறு வியாபாரக் கடன், தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும்.
கோ-ஆப்டெக்ஸில் 10% சேவை கட்டணக் குறைப்பு, ஆவின் கடைகளில் 5% தள்ளுபடி, இ-சேவை மையங்களில் 10% சேவை கட்டண விலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். மேலும், இந்த அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைக்கான முதன்மை ஆதாரமாகவும் பயன்படுத்தப்படும்.