தரவு உள்ளீட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மின்வாரியத்தில் தினசரி தரவு உள்ளீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் மூலம், ஒப்பந்த அடிப்படையில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதுவரை மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.20,310 ஊதியம் பெற்றுவந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாவட்ட ஆட்சியரகம் ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியதை தொடர்ந்து, மின்வாரியத்தின் தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், ஊதிய உயர்வுக்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய உத்தரவின்படி, தரவு உள்ளீட்டு ஒப்பந்த பணியாளர்களின் தினசரி கூலி ரூ.718 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாத சம்பளம் ரூ.21,540-ஐ மீறக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மாதாந்திர ரூ.21,540 என்ற உச்ச வரம்பை வைத்து, பணிபுரிந்த நாட்களின் அடிப்படையில் கணக்கிட்டு வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மின்வாரியம் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.