‘நான் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக முதல்வர் கூறுவது குழந்தைத்தனமானது’ – எடப்பாடி பழனிசாமி
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வெளியே வந்தபோது, நான் முகத்தை துடைத்ததை “முகத்தை மறைத்துக்கொண்டு வந்தார்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவது மிகச் சிறுபிள்ளைத்தனமாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“கடந்த ஜூலை 7 முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ளேன். மக்களிடம் கிடைக்கும் ஆதரவு, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதைக் காட்டுகிறது. திமுக ஆட்சி நீங்கி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி, கருப்பு பலூன் காட்டியது. ஆனால் ஆளும் கட்சியாகிய பின் பிரதமரை வரவேற்று பெரும் விழாக்கள் நடத்தினார்கள். மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளைக் குடையும் கொடுத்தனர். இது திமுகவின் இரட்டை முகத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
நான் டெல்லிக்கு சென்றது முன்கூட்டியே அறிவித்துவிட்டே. கடந்த 16ம் தேதி துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும், பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அரசுக் காரில் சந்தித்தேன். அப்போது என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இருந்தனர். சந்திப்பு முடிந்து சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தேன்.
அப்போது முகத்தை துடைத்ததை, முகம் மறைத்துக்கொண்டு வந்ததாக ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டன. ஊடகங்கள் இப்படிச் செய்பது வருத்தமாக இருக்கிறது. உண்மையில்லாமல் ஒரு தலைவரை அவதூறு செய்வது பத்திரிகைகளுக்கு ஏற்றதல்ல. நடுநிலையுடன் இருக்க வேண்டும்.
கரூரில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வரும் இதையே கூறியுள்ளார். ஆனால் நான் வெளிப்படையாகவே சந்தித்து வந்தேன். மறைக்க ஒன்றுமில்லை. முதல்வர் இப்படிப் பேசுவது பொருத்தமற்றது. அதனால்தான் அவரை ‘பொம்மை முதல்வர்’ என்கிறோம்.
எங்கள் ஆட்சி சிறப்பாக நடந்தது. குற்றம் சொல்லக் கூடிய ஆதாரம் அவரிடம் இல்லை. அதனால் இப்படி குழந்தைத்தனமாக பேசுவது அவருக்கு ஏற்றதல்ல.”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.