காசா கொடுமைகளை நிறுத்த உலக நாடுகள் ஒன்றாக முன்வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

“காசாவில் நடைபெற்று வரும் கொடுமைகளை உடனடியாக நிறுத்த இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும்; மேலும், உலகம் முழுவதும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த மனிதாபிமான பேரழிவைத் தடுக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்,” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

“காசாவில் நிகழ்ந்து வரும் மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அங்கிருந்து வரும் ஒவ்வொரு காட்சியும் மனதை உலுக்குகிறது.

பசி காரணமாக தவிக்கும் சிறுவர்கள், அழுகுரலில் துடிக்கும் பச்சிளம் குழந்தைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சுகள், மேலும் ஐ.நா. விசாரணை ஆணையம் அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக வெளியிட்டுள்ள அறிக்கை – இவை அனைத்தும் எந்த மனிதனும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை வெளிப்படுத்துகின்றன.

அப்பாவிகள் கொல்லப்படும்போது அமைதியாக இருப்பது ஒரு விருப்பமாக இருக்க முடியாது. நம் மனசாட்சி விழிக்க வேண்டிய தருணம் இது. இந்தியா உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும்; உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு, காசாவில் நடக்கும் இந்த கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் காசா மோதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box