தினகரன், ஓபிஎஸ், சசிகலா சவாலால் பழனிசாமி சிக்கலில்: கிருஷ்ணசாமி விமர்சனம்
தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தடுமாறி வருகிறார். தங்களது உள்கட்சிச் சிக்கல்களை தீர்க்க மறைந்த தலைவர்களை அரசியல் பலியாக்க வேண்டாம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய சுதந்திரத்திற்காக பலர் குரல் கொடுத்திருப்பதால், அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவது தவறல்ல என்றார். ஆனால், தேர்தல் காலத்தில் மறைந்த தலைவர்களின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அதிமுகவை எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு தொடங்கினார். அதற்கு முன் அவர் திரையுலகில் 30 ஆண்டுகளாக சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளுக்கு எதிராக செயல்பட்டார். எந்த சமுதாயத்துடனும் இணைக்காமல் இயக்கத்தையும் நடத்தினார். ஆனால் ஜெயலலிதா முதல்வரானபோது சில சமூகங்களுக்கு ஆதரவாகவும், பட்டியலின மக்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டதால் 1995-இல் கொடியன்குளம் சம்பவம் சர்வதேச சர்ச்சையாக மாறியது.
அதே சமயம் மக்களின் கோபத்தை அடக்க விருதுநகரை மையமாகக் கொண்டு சுந்தரலிங்கனார் போக்குவரத்து கழகத்தை அறிவித்தார். அந்த பெயர் வைத்ததே தென் தமிழகத்தில் பிரச்சினையாகிவிட்டது. ஆனால், இப்போது பல அரசியல் பிரச்சினைகள் இருக்கும் போதிலும், எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை விமான நிலையப் பெயர் குறித்து பேசுவது தேவையற்ற சர்ச்சை என கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
உள்கட்சியில் தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனை அரசியல் ரீதியாக கையாள வேண்டும். பெயர் மாற்றத்தில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும்; அதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், மதுரை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் கேட்டரிங் பில்லுக்குப் பணம் கொடுக்காமல் சாதி குறித்து பேசியதாக குற்றம் சாட்டி, அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தீண்டாமை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் கோரினார்.
மேலும், 18 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தும் மக்களின் பிரச்சினைகளை ஆறு மாதத்தில் தீர்க்க முடியாது. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மக்களுக்கு எவ்விதப் பயனும் தரவில்லை. 100 நாள் வேலை தவிர, கிராமப்புறங்களில் வேலையின்மை நிலவி வருகிறது. ஏழை, பணக்கார இடைவெளி பெருகியுள்ளது. அதிகாரத்தில் பங்கெடுத்தால் மட்டுமே ஏழை மக்களுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்தார்.
2026 தேர்தல் மிக முக்கியமானதாக இருக்கும். ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பை முன்னிட்டு எங்கள் கூட்டணி அமைக்கப்படும். தற்போது நடுநிலையாக இருந்தாலும், அடுத்த ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார்.
தவெக அரசியல் வலிமையை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதனை கவனத்தில் கொண்டு கூட்டணித் தீர்மானம் எடுப்போம் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.