அனைத்து கட்சிகளுக்கும் ஒரே விதி – பொதுக்கூட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை டெபாசிட் முறையில் வசூலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தனது மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். வரும் டிசம்பர் 20 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் அனுமதியைப் போலவே பாரபட்சமின்றி தவெகக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரி, துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அதில், “மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத சிக்கலான நிபந்தனைகள் தவெகக்கும் மட்டும் விதிக்கப்படுகின்றன. எத்தனை வாகனங்கள், எந்த பாதை வழியாக செல்ல வேண்டும் என கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என்பதும் நியாயமற்ற நிபந்தனை” என மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, “இவை எல்லாம் அனைத்து கட்சிகளுக்கும் சமமாக விதிக்கப்பட வேண்டியவை. சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும்” என எச்சரித்தார்.

மேலும், “கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நீங்கள் நடந்துகொள்ளலாம்” எனவும் அறிவுறுத்தினார்.

அதே நேரத்தில், காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜ் திலக், “எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், தேவையான நிபந்தனைகளுடன் வழங்கப்படுகின்றன” என வாதிட்டார். மேலும், திருச்சி கூட்டத்தின் போது தவெக தொண்டர்கள் உயர்ந்த இடங்களில் ஏறிய புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனைப் பார்த்த நீதிபதி, “இவ்வாறு அபாயகரமாக நடந்தால் யார் பொறுப்பு? காவல்துறை இதனை கட்டுப்படுத்த வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார்.

இறுதியில், அனைத்து கட்சிகளுக்கும் சமமான விதிகள் வகுக்க வேண்டும் என்றும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை டெபாசிட் முறையில் வசூலிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தொடர்பில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 24-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Facebook Comments Box