கடல்வழி வணிகத்தை ஊக்குவிப்பது அனைவரின் பொறுப்பு: அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, “நீலப் பொருளாதாரம்” எனப்படும் கடல்வழி வணிகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது நம் கடமை என துறைமுக மேம்பாட்டாளர்களிடம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

சென்னை தி.நகரில் நடைபெற்ற நீலப் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

  • தமிழகத்தின் கடற்கரை, சர்வதேச கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மாநிலத்தில் 14 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழிலாளர்கள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன்வளர்ப்புப் பண்ணைகள், மத்திய – மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வணிகத் துறைமுகங்கள், கடற்கரை சுற்றுலா மையங்கள் என பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.
  • இதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகள் — அலையாத்தி காடுகள், ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதிகள், மன்னார் வளைகுடா பவளப்பாறைகள், பறவைகள் சரணாலயங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள், கடலோர தொழில்துறை பூங்காக்கள், கலங்கரை விளக்கங்கள் ஆகியனவும் கடற்பகுதியில் அமைந்துள்ளன.
  • உலகளவில் சுமார் 80% வணிகமும் கடல்வழியாக நடைபெறுகிறது. நம் நாட்டின் 11,000 கி.மீ. நீளமான கடற்கரை வழியே சுமார் 95% வணிகம் நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கடல்வழி வணிக வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.
  • வணிகத் துறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், கடல்சார் சுற்றுலா, கப்பல் கட்டும் மற்றும் பராமரிக்கும் துறைகளில் முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
  • கப்பல் மார்க்க சரக்கு போக்குவரத்து செலவு, சாலை அல்லது ரயில் வழி போக்குவரத்து செலவை விட குறைவாக இருக்கும். அதனால் கடல்வழி வணிகம் இயல்பாகவே பயனளிக்கும்.
  • சென்னை – கன்னியாகுமரி சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை, துறைமுகங்களுக்கு எளிதான இணைப்பை தருகின்றன. மேலும் ரயில் வசதியும் போதுமான அளவில் உள்ளது. இந்த சாத்தியங்களை பயன்படுத்தி துறைமுக மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை துறைமுக மேம்பாட்டாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வேலு குறிப்பிட்டார்.

மாநாட்டில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால், நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா. செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி தி.ந. வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box