புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கும் அதிகாரம் டிஜிபிக்கு
குற்றவாளிகளை பிடிக்க புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கும் அதிகாரம் தற்போது தமிழக டிஜிபிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின், “குற்றம் அற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். குறிப்பாக சைபர் குற்றங்கள், இணைய மோசடிகள், ஆன்லைன் முதலீட்டு கபடங்கள் போலீஸாருக்கு மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளன.
இத்தகைய மோசடிகளை நடத்தும் குற்றவாளிகள் பெரும்பாலும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்தபடி செயல்படுகின்றனர். பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை சில நொடிகளில் பறித்து, அதை 24-48 மணி நேரத்துக்குள் பல வங்கிக் கணக்குகளில் மாற்றி மறைத்து விடுகின்றனர்.
இந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுவரை, விமானப் பயண செலவுக்கான அனுமதி அரசின் ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாக இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டு, குற்றவாளிகள் தப்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதனைத் தடுக்கும் வகையில், விசாரணை அதிகாரிகள் விமானத்தில் பிற மாநிலங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கும் அதிகாரம் டிஜிபிக்கு வழங்கப்பட வேண்டும் என டிஜிபி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது, புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் செல்ல டிஜிபியின் அனுமதி மட்டும் போதுமானது என புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடைமுறையால் சைபர் மோசடி, பொருளாதார குற்றங்கள் மட்டுமின்றி, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகளில் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.