பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு
பனைமரங்களை வெட்டுவதற்கு இனி மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி அவசியம் என தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வேளாண்துறை வெளியிட்ட அரசாணை விவரப்படி, 2022-ம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சர், “பனைமரங்களை வேரோடு வெட்டி விற்பனை செய்வது மற்றும் செங்கல் சூளைகளில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழலில் மட்டும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பனைமரம் வெட்ட அனுமதிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய், வேளாண், காதி கிராமத் தொழில் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்டு குழு அமைக்கப்படும். தேவையெனில் ஆட்சியர் மேலும் உறுப்பினர்களை சேர்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் கதர்த்துறை வெளியிட்ட கணக்குப்படி தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைமரங்கள் உள்ளன. பனைப்பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டு 3 லட்சம் குடும்பங்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளன. பனைப்பொருட்கள் ஏற்றுமதியால் அந்நியச் செலாவணி வருவாயும் கிடைக்கிறது. இதனால், பனைமரங்களைப் பாதுகாக்க அரசு கடந்த 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அரசாணைபடி, பனைமரத்தை வெட்ட வேண்டுமெனில்:
- தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் உழவர் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட வட்டார அலுவலர்கள் ஆய்வு செய்து, காரணம் குறித்த அறிக்கையை மாவட்ட குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப மாவட்ட குழு கூட்டம் நடக்கும்.
- அனுமதி வழங்கப்பட்டால், வெட்டப்படும் ஒவ்வொரு பனைமரத்திற்கும் 10 பனைக்கன்றுகளை நட்டு வளர்ப்பது கட்டாயம்.
- குழுவின் முடிவு இறுதியானதாகும்.
மேலும், வெட்டும் செயல்முறையை கண்காணிக்க குழுவின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரப்பாகங்களை ஏற்றுச் செல்லும்போது தோட்டக்கலை இயக்குநரின் அனுமதிப் பத்திரம் காட்டப்பட வேண்டும் என்றும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.