ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்டலில் மட்டும் பதிவேற்றுவது போதாது; நிறுவனத்துக்கும் அனுப்ப வேண்டும்: மதுரை ஐகோர்ட்

ஜிஎஸ்டி அபராத நோட்டீஸை போர்டலில் பதிவேற்றுவதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் அனுப்ப வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஷார்ப் டேங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிஷாமேனன் தாக்கல் செய்த மனுவில், 2022-ஆம் ஆண்டு மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய பின்னர், ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 74-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பியதாகவும், பின்னர் கூடுதல் வரி, வட்டி மற்றும் அபராதம் விதித்ததாகவும் கூறினார். இந்த உத்தரவை ரத்து செய்து மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டும் என கோரினார்.

மனுதாரர் தரப்பில், அந்த உத்தரவு போர்ட்டலில் மட்டுமே பதிவேற்றப்பட்டதால், நிறுவனத்துக்கு நேரடியாக அனுப்பப்படவில்லை. இதனால் உரிய காலத்தில் மேல்முறையீடு செய்ய இயலாமல் போய்விட்டது என வாதிடப்பட்டது.

ஜிஎஸ்டி அதிகாரிகள் தரப்பில், போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்தே மேல்முறையீட்டுக்கான காலக்கெடு தொடங்கும் என வலியுறுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், டிஜிட்டல் முறையை புறக்கணிக்க முடியாது என்றாலும், போர்டலில் மட்டும் பதிவேற்றம் செய்வது சில சமயங்களில் போதுமானதல்ல எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, மதிப்பீட்டாளருக்கு அறிவிப்பு அனுப்பப்படாத வரை மேல்முறையீட்டுக்கான கால வரம்பு தொடங்காது என்றும் விளக்கமளித்தார்.

இதனால், ஜிஎஸ்டி தொடர்பான ஆட்சேபனைக்குரிய உத்தரவை நிறுவனத்திற்கும் நேரடியாக அனுப்ப வேண்டும். அதன் பின்னரே மேல்முறையீடு செய்யும் காலவரம்பு நடைமுறைக்கு வரும். அதுவரை அபராத நோட்டீஸை அமல்படுத்த முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

Facebook Comments Box