3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

சென்னையில் 3,000 சமையல் கலைஞர்கள் பங்கேற்ற சமையல் போட்டி திருவிழா விமரிசையாக தொடங்கியது. இதை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் சார்பில், ஆஹார் உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தின் (சிகா) 7-வது ‘கலினரி ஒலிம்பியாட்’ சமையல் போட்டி திருவிழா மற்றும் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான கோப்பையை சங்கத்தின் தலைவர் கே.தாமோதரன் வெளியிட்டார்.

பல்வேறு சமையல் போட்டிகள்:

இது உலக சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படும் இந்தியாவின் முதல் தேசிய சமையல் போட்டியாகும். இதில் தென்னிந்தியாவை சேர்ந்த சமையல் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார்கள் போன்றவற்றில் இருந்து மூத்த மற்றும் பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நேரடி சமையல் போட்டிகள், காக்டெய்ல் மற்றும் மாக்டெய்ல் போட்டிகள், விருந்தோம்பல் பராமரிப்பு நிபுணர்களுக்கான போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

முதல் நாளான நேற்று, மூன்று அடுக்கு திருமண கேக்குகள், வெண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட சிற்பங்கள், நறுமணப் பொருட்களுக்கான போட்டிகள் ஒரு தொகுதியிலும், சமையல் குழுக்களுக்கான பஃபே ஒரு தொகுதியிலும், நேரடி படைப்பு திறன் பிரிவில் பரோட்டா, உணவகங்களின் சிறந்த தயாரிப்புகள் மற்றும் அசல் பாரம்பரிய உணவுகள் ஒரு தொகுதியிலும் காட்சிப்படுத்தப்பட்டன. வெண்ணெய்யில் செய்யப்பட்ட சிற்பங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தன. இந்த போட்டிகளில் மாலத்தீவு, மொரீஷியஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கூறினார்:

“தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கம் சமையல் நிபுணர்களின் லாப நோக்கமற்ற தன்னார்வலர்கள் கொண்ட அமைப்பாகும். தமிழகத்தில் சர்வதேச அளவில் விருந்தோம்பல் மற்றும் சமையல் கலையின் தரத்தை உயர்த்தும் விதமாக, உலகெங்கும் உள்ள சமையல்கலை நிபுணர்களின் உச்ச அமைப்பான உலக சமையல்கலை வல்லுநர்களுடன் இந்த அமைப்பு இணைந்திருப்பது சிறப்பானது. இந்த போட்டிகள் உலகெங்கும் உள்ள சமையல் கலைஞர்களின் திறமைகளை பறைசாற்றும்.”

இந்நிகழ்வில் தென்னிந்திய சமையல்கலை வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.சீதாராம் பிரசாத், இந்திய சமையல்கலை வல்லுநர் சஞ்சீவ் கபூர், இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சித் சிங் கில், பொதுச்செயலாளர் வி.விஜய பாஸ்கரன், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் பிரதீப் சிங், ஆச்சி மசாலா குழுமத்தின் நிறுவனர் ஏ.டி.பத்மசிங் ஐசக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box