அதிமுகவுக்கு அமித் ஷா வீடே நீதிமன்றம் – உ.வாசுகி விமர்சனம்
அதிமுகவுக்கு அமித் ஷாவின் இல்லமே நீதிமன்றமாக மாறியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கே.சங்கரன், ஏ.முனியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உரையாற்றிய உ.வாசுகி கூறியதாவது:
பாஜக அரசு, தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து எதிர்க்கட்சிகளை துன்புறுத்தி வருகிறது. பெரும் நிறுவனங்களுக்கு கடனுதவி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஏழை மக்களிடம் அதிக வரிகள் விதித்து நிர்மலா சீதாராமன் பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறார். அண்ணாமலை அரசியல் கற்க லண்டனுக்கு செல்வதற்குத் தேவையில்லை; இங்கேயே கற்றுக்கொள்ளலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கம்யூனிஸ்ட்கள் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று விமர்சிக்கிறார். ஆனால், திமுக பாம்பாகவும் இல்லை; கம்யூனிஸ்ட்கள் தவளையாகவும் இல்லை. உண்மையில் தவளை அதிமுகவே. பாஜக எனும் பாம்பு அதிமுகவை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
அதிமுக உள்கட்சி விவகாரங்களில் அமித் ஷா தலையிடுகிறார். அவரின் இல்லமே அதிமுகவுக்கான நீதிமன்றமாக மாறியுள்ளது. எங்களுக்கு கூட்டணி தர்மத்தை விட மக்கள் தர்மமே முக்கியம். மக்களின் நலனுக்காகத்தான் கூட்டணிகள் வைக்கப்படுகின்றன. அந்த நலனில் பாதிப்பு ஏற்பட்டால் எது கட்சியாக இருந்தாலும் எதிர்த்து பேசுவோம். என உ.வாசுகி வலியுறுத்தினார்.
கூட்டத்தில் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், ஆர்.பேச்சிமுத்து, எஸ்.அப்பாதுரை, டி.ராஜா, டி.சண்முகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயிலும் கலந்து கொண்டனர்.