ராமேசுவரத்தில் சட்டவிரோத 24 மணி நேர மதுவிற்பனை – பக்தர்கள், பொதுமக்கள் வேதனை

புனித தலமான ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோயில் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரத்தில், புனிதத்தைக் குலைக்கும் வகையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, ராமேசுவரம் தீவில் செயல்பட்ட 11 மதுக்கடைகளில் 9 மூடப்பட்டன.

தற்போது பாம்பனில் மட்டும் 2 கடைகள் இயங்குகின்றன. அந்த கடைகளையும் மூடி, அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தை முழுமையாக மதுவிலக்குப் பகுதி ஆக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாம்பனில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து, ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளில் அதிக விலையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது.

அக்னிதீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு வாசல் அருகே கூடுதலாக மது விற்பனை நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் களமிறங்கி குடிசைத் தொழில்போல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை எந்த நேரத்திலும் மதுபாட்டில்கள் எளிதில் கிடைக்கின்றன.

இளைஞர்கள், மீனவர்கள் கூடுதல் விலையில் மது வாங்கி அருந்துவதால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், இங்கு மது அருந்துவோர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், ராமேசுவரத்தின் புனித தன்மை குலைந்து வருகிறது.

எனவே, ராமேசுவரத்தில் நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனையை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற போலீசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Facebook Comments Box