வானிலை முன்னறிவிப்பு : தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை சாத்தியம்

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கமாக தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

“தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செப்டம்பர் 22 முதல் 24 வரை வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செப்டம்பர் 25 முதல் 27 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33°செ., குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°செ. இருக்கும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32-33°செ., குறைந்தபட்ச வெப்பநிலை 27°செ. இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 23 வரை,

  • தென்தமிழக கடலோரம்,
  • வடதமிழக கடலோரத்திற்கு அப்பாலான தென்மேற்கு வங்கக்கடல்,
  • மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இதேபோன்ற காற்று வீசும்.

வங்கக்கடல்:

இன்று வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகள், அந்தமான் கடலில் மணிக்கு 40-50 கி.மீ., இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

நாளை முதல் செப்டம்பர் 23 வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், அந்தமான் கடலில் 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

செப்டம்பர் 24, 25 தேதிகளில் மத்திய-தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் மணிக்கு 45-55 கி.மீ., இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், மத்திய-தெற்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், வடக்கு வங்கக்கடல், ஆந்திரா–ஒடிசா கடலோரத்தில் மணிக்கு 40-50 கி.மீ., இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

அரபிக்கடல்:

இன்று முதல் செப்டம்பர் 23 வரை தென்மேற்கு – மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில், மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும்.

செப்டம்பர் 24, 25 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் இதேபோன்று காற்று வீசும்.

இதனால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box