நல்ல நிர்வாகத்திற்கான முதுகெலும்பு குடிமைப் பணியாளர்கள்: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு
நாட்டில் சிறந்த நிர்வாகம் அமைய குடிமைப் பணியாளர்களே அடிப்படை ஆதாரமாக உள்ளனர் என்று, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய வளாக தொடக்க விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் 12வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்று, அண்ணாநகர் மற்றும் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட புதிய வளாகங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் எம்.பூமிநாதன் தலைமையிலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
ராம்நாத் கோவிந்த் உரையில் கூறியதாவது:
“நான் சிறுவனாக இருந்த காலத்தில் முன்னாள் முதல்வர் காமராஜ் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்டதை கேட்டுள்ளேன். அதுபோல, வெற்றியாளர்களை உருவாக்கும் கிங் மேக்கர்ஸ் அகாடமி 12 ஆண்டுகளாக சிறப்பாக பயணம் செய்துள்ளது.
புதிய வளாகங்கள் செங்கல், கம்பிகளால் ஆன கட்டிடம் மட்டுமல்ல; இளைஞர்களின் கனவுகள், உறுதியை வளர்க்கும் இடமாகும். குடிமைப் பணிகளில் இணையும் இளைஞர்கள் அர்ப்பணிப்பு, நேர்மையுடன் நாட்டுக்கு பெரும் சேவை ஆற்றுகின்றனர்.
கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து கல்வி வழங்குவது பாராட்டத்தக்கது. அகாடமி அறிவை மட்டுமின்றி போட்டியிடும் தன்னம்பிக்கையையும் வழங்குகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கிறது. அதில் அகில இந்திய அளவில் 2 பேரும், தமிழக அளவில் 5 பேரும் முதலிடம் பிடித்துள்ளனர். தேச முன்னேற்றத்திற்கு இத்தகைய பங்களிப்பு அவசியம். நமது நாடு பன்முக மொழி, கலாச்சாரம் கொண்டது. அனைவரின் தேவைகளையும் உணர்ந்து சேவை செய்வது முக்கியம். சிறந்த நிர்வாகத்திற்கான முதுகெலும்பு குடிமைப் பணியாளர்களே.”
ஜி.கே.வாசன் உரையில்:
“12 ஆண்டுகளாக கிங் மேக்கர்ஸ் அகாடமி தொடர்ந்து வளர்ந்து, திறமைமிக்க, நேர்மையான குடிமைப் பணியாளர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் சட்டங்களையும், அரசு நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பங்காற்றுகின்றனர். சிறந்த நிர்வாகத்திற்கு குடிமைப் பணி அதிகாரிகள்தான் முக்கிய தாங்கும் தூண்கள்.”
எம்.பூமிநாதன் உரையில்:
“12வது ஆண்டை எட்டியுள்ள கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, குறிப்பாக கிராமப்புற மாணவர்களை முன்னேற்றம் அடைய வழிநடத்தி, அர்ப்பணிப்பு கொண்ட குடிமைப் பணியாளர்களாக உருவாக்குவதே எங்கள் நோக்கம். புதிய வளாகங்கள் இந்த இலக்கை அடையும் முக்கியக் கல்லாக இருக்கும்.”
நிகழ்வில் துணை நிறுவனர் சத்யஸ்ரீ பூமிநாதன், ஆலோசகர் விவேக் ஹரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.