கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கம்: அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (பி.டி.ஆர்) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது:

“தமிழர் அறிவு மரபுகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம், ‘தமிழ் மின் நூலகத்தை’ நிறுவி செயல்படுத்தி வருகிறது.

இந்நூலகத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான அரிய நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் மின்மயமாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் தொடர்ச்சியாக பதிவேற்றப்படுகின்றன.

அந்தவகையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிந்தைய கடந்த 4 ஆண்டுகளில், 37 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழ் மின் நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் இரா.இளங்குமரனார், செ.இராசு, கந்தர்வன், செ.திவான், தஞ்சை பிரகாஷ், நா.மம்மது, நெல்லை கண்ணன், விடுதலை இராசேந்திரன், சோம.லட்சுமணன், இரா.மோகன், கு.கோதண்டபாணி பிள்ளை, அம்சவேணி பெரியண்ணன், மா.சு.சம்பந்தன், கோ.முத்துப்பிள்ளை ஆகிய 14 அறிஞர்களின் நூல்கள் ஏற்கனவே https://tamildigitallibrary.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை மின்நூலகத்தில் சேர்க்கும் பணிகள் முறையாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box