பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு துணைபட்டு துரோகம்செய்தவர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நேற்று நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முதல்வருக்கு வெள்ளி செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினர்.
முதல்வர் கூறியதாவது:
“ஒற்றுமையே வெற்றிக்கான முதன்மை அடிப்படை. காஸாவில் நடந்து வரும் துயரத்தை பார்த்து மனசாட்சியுள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. விரைவில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”
நபிகள் நாயகம் பாடத்திட்டத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லீம்களுக்கு இடர் வரும்போது துணை நிற்கும் முதல் அரசியல் கட்சி திமுக தான் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தும்போது, அதிமுக இரட்டை வேடம் போட்டதை அனைவரும் அறிவதாகவும், திமுக போன்ற கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டங்கள் வகுப்பு திருத்தச் சட்டத்தின் முக்கிய கூறுகளுக்கு தடை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் வலியுறுத்தியது: “பாஜகவின் மலிவான சர்வாதிகார, எதேச்சதிகார அரசியலுக்கு துணைபட்டு துரோகம்செய்தவர்களை புறக்கணிக்க வேண்டும். முஸ்லீம் மக்களின் உரிமையை பாதுகாத்து, உரிமையை பெற்றுத் தரும் இயக்கமாக திமுக எப்போதும் இருப்பது உறுதி.”
இந்நிகழ்வில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமை காஜி மவுலவி முகமது அக்பர், ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திமுக இலக்கிய அணித் தலைவர் அ.அன்வர் ராஜா, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, சமுதாய ஒருங்ணைப்பாளர் அப்பல்லோ ஹனிஃபா, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி ஆகியோர் பங்கேற்றனர்.