குறைந்த மின் அழுத்த பிரச்சினை: போராடும் வேங்கடமங்கலம் கிராம மக்கள்!

வண்டலூர் அருகே மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து வேங்கடமங்கலம் ஊராட்சி பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஊராட்சியின் பல இடங்களில் இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்களை இயக்கும்போது பழுதடைந்து விடுகிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள் இரவில் தூங்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வம் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. வேங்கடமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. இங்கு 100 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளதால் மின் அழுத்த குறைபாடு உள்ளது. போதிய மின்மாற்றிகள் இல்லாததுதான் மின் அழுத்த குறைபாட்டுக்கு காரணம்.”

குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காண மாம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக மின்மாற்றி வேண்டி உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

2 ஆண்டுகள் கடந்த பின்பும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. “எங்கள் பகுதிக்கு மின்மாற்றி அமைத்து குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும்,” என்றார் செல்வம்.

Facebook Comments Box