டிடிவி தினகரனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு: ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தை!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், பல்வேறு அரசியல் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் அமமுக இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. பின்னர், சில மாதங்களுக்கு முன்பு அதிமுக மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது.
அதன் பின், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த தினகரன், பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். அப்போது, அண்ணாமலை தங்களை மரியாதையுடன் நடத்தியதாக தினகரன் பாராட்டியதோடு, நயினார் நகேந்திரனை விமர்சித்தும் இருந்தார்.
இந்த நிலையில்தான், சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் அண்ணாமலை நேற்று இரவு சந்தித்தார். இந்த சந்திப்பில் தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டணியிலிருந்து விலகிய தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த சந்திப்பு கூட்டணியை மீண்டும் பேசி தீர்க்க வந்ததா அல்லது வேறு அரசியல் நகர்வுகளின் தொடக்கமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.