செப்.25-ல் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வு – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ உள்ளிட்ட 7 திட்டங்கள் தொடர்பாக சென்னையில் செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தமிழக வருவாய்த் துறை செயலர் பி.அமுதா தெரிவித்தார்.
இந்த நிகழ்வு குறித்து தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறை செயலருமான பி.அமுதா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செப்டம்பர் 25ம் தேதி ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தமிழகத்தின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணிவரை ஒவ்வொரு சிறப்பு திட்டத்தையும் பற்றி சாதனையாளர்கள், பயன்பெற்றவர்கள், பங்கேற்பாளர்கள் அனுபவங்களை பகிர்வார்கள். அதன்பின் சிறப்பு விருந்தினரான தெலங்கானா முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் 2025–26ம் ஆண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களுக்கான நிதி வெளியீடும், மாணவர்களுக்கு ரூ.1000 தரக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2.57 லட்சம் பேர் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெறவுள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திறன் வளர்ச்சித் திட்டமான ‘நான் முதல்வன்’ மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 14.40 லட்சம் மாணவர்கள் பங்கேற்று, 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் 500-க்கு மேற்பட்ட படிப்புகள் உள்ளன.
இந்தத் திட்டத்தால், ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் உள்ள இணையதளத்தில் படிப்பு முடித்து பதிவு செய்தால், வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் கிடைக்கும். இதுதவிர, கல்லூரி ஆசிரியர்களுக்கும் இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை உணவு திட்டத்தில் 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளின் வருகைப் பதிவேடு மேம்பட்டு, அவர்கள் தினசரி பள்ளிக்கு வருகின்றனர். படிப்பு திறன் மேம்பட்டுள்ளதுடன், பெற்றோரின் சிரமங்கள் குறைந்துள்ளன.
அதேபோல், 2023-ல் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தால், 12ம் வகுப்பு முடித்து 75% பேர் உயர்கல்வியில் சேர்கின்றனர். இதுவரை 5.29 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதேபோல், 2024-ல் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 3.92 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இந்த ஆயிரம் ரூபாய் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கூடுதல் படிப்புகள் படிப்பதுடன், தேவையான உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குகின்றனர். பஸ் பயணம், உடைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்புக்கு ரூ.548 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு ரூ.150 கோடிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டரங்கம் திட்டத்தில், 75 இடங்களில் தலா ரூ.3 கோடி செலவில் கட்டும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் மூலம் ரூ.29.63 கோடியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் டெக்னிக்கல் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பதக்கம் வாங்கும் வகையில் 21 பேருக்கு தேவையான பயிற்சிகள் எம்ஐஎம்எஸ் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
கிராமப் பகுதிகளில் நிறைய பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்கள் உதவியின்றி கஷ்டப்படுகின்றனர். இதனால் பள்ளிக் கல்வித் துறை மூலமாக, இத்தகையவர்களை தேர்வு செய்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயர் கல்விக்கு உதவி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் ஐஐடி, என்ஐடி போன்ற பல்வேறு நிறுவனங்களில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு 1500–2000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் சிறப்பு தேவைகள் கொண்ட 150 மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களையும் படிக்க வைத்திருக்கின்றனர்.
இந்த திட்டங்கள் தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கல்வியின் வளர்ச்சி, அதற்கான அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள், சாதனையாளர்களை கவுரவிப்பது மற்றும் விருது வழங்குவது குறித்தும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது” என்று அவர் தெரிவித்தார்