துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 2006–2011 ஆம் ஆண்டுக்கால திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2007 முதல் 2009 வரை, வருமானத்தை விட அதிகமாக ரூ.1.40 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2017 இல் இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், “வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. தினந்தோறும் விசாரணை நடத்தி, ஆறு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி மற்றும் பி.வில்சன் வாதித்ததாவது:
- சாந்தகுமாரி கடந்த 33 ஆண்டுகளாக தனியாக வணிகம் செய்து வருகிறார்.
- அவர் ஆண்டுதோறும் முறையாக வருமானவரி செலுத்தி வருகிறார்.
- இருந்தபோதும், துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியின் வருமானத்தை ஒன்றாகக் கணக்கிட்டு சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
- இது அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகும்.
- மேலும், துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், சட்டப்பேரவைத் தலைவரிடம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தான், வேலூர் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது. எனினும், உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்து மறுவிசாரணை உத்தரவிட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.