திருமங்கலம்–வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை: டிச.25-ல் திறப்பு

மதுரை–திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரை அமைக்கப்பட்ட 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து வரும் டிசம்பர் 25-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகம்–கேரளா மாநிலங்களை இணைக்கும் வகையில் மதுரை–கொல்லம் 4 வழிச்சாலைப் பணிக்கு 2023ஆம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் முதற்கட்டமாக திருமங்கலம்–ராஜபாளையம் இடையிலான 71.6 கி.மீ தூரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் திருமங்கலம்–வடுகப்பட்டி இடையிலான 36 கி.மீ சாலை ரூ.541 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, வளைவுகள் நேராக்கப்பட்டுள்ளன. 2023 பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்பணிகள் இதுவரை 92% முடிவடைந்துள்ளன. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அதிகாரிகள் கூறியதாவது:

“தமிழகம்–கேரளாவை இணைக்கும் இந்தச் சாலை தமிழகத்தில் மட்டும் 129.92 கி.மீ நீளம் கொண்டது. இதன் மூலம் பொருளாதார மையங்களுக்கிடையிலான தூரம் குறைந்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை மேம்படும். தற்போது திருமங்கலம்–வடுகப்பட்டி பகுதி முதற்கட்டமாக திறக்கப்பட உள்ளது. இப்பகுதியில் 16 சுரங்கப் பாதைகளில் 2 மட்டும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்பு பொதுமக்கள் போராட்டம் காரணமாக சற்று தாமதமானது. இப்போது அனைத்தும் முடிவடைய உள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்க உள்ளார்” என தெரிவித்தனர்.

Facebook Comments Box