விஜய்யை பேச அனுமதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கருத்து
தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் பீஹாருக்குச் சென்ற அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பாட்னாவில் வாக்குத் திருட்டு பேரணியை ராகுல் காந்தி நடத்தினார். அதுகுறித்த விவாதத்தில் பங்கேற்பதற்காக பீஹார் மாநிலம் செல்கிறேன்.
கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீடுகள் வேண்டும் என்ற விருப்பத்தை கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. அவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் நான் எடுத்துச் செல்வேன். ஆனால் முடிவு எடுப்பது தலைமையும் பொறுப்பாளர்களுமே.
தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி மறைமுகமாக பேசியதில்லை. எங்களுக்கு மறைமுக பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லை. விமர்சிக்க ஒன்றும் இல்லாததால், தவெக தலைவர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. அவர் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர் என்ன கூறுகிறார் என அனைவருக்கும் தெரியும். விஜய் கட்சிக்கு கூட்டம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது என்று கூறப்படுகின்றது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு அரசு உடனே அனுமதி வழங்குகிறதா?
ஒவ்வொரு போராட்டத்திற்கும் போராடித்தான் அனுமதி பெற வேண்டியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில், போராட்டம் நடத்தும் போதே என்னை காவல்துறை கைது செய்துள்ளது. அதற்காக ‘அரசு நெருக்கடி தருகிறது’ என்று சொல்ல முடியுமா? காவல்துறை தங்கள் வேலையைச் செய்கிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதும் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கும்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.