நாமக்கல்லில் கோழிப் பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை
நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல கோழிப் பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகங்களில் கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வாங்கிலி சுப்பிரமணியம் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக் கோழி மற்றும் பிராய்லர் கோழிப் பண்ணைகள், கோழித் தீவன ஆலை, ஹேச்சரீஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும், தமிழக பல இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளை இண்டகரேஷன் முறையில் இயக்கி வருகிறார். இவர், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவும் செயல்படுகிறார்.
இந்நிலையில், இன்று 30-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் நாமக்கல் வந்துவிட்டு வாங்கிலி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவன அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மாலை 5 மணியைக் கடந்தும் சோதனை நீடித்தது. வெளியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வருமான வரித் துறை அதிகாரிகள், சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவண விவரம் வெளியிடப்படும் என தெரிவித்தனர். சோதனை நடைபெற்ற இடம் வாங்கிலி சுப்பிரமணியம் இல்லம் அருகே நாமக்கல் திமுக எம்எல்ஏ ராமலிங்கம் இல்லம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.