நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை

நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப்பண்ணை உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மோகனூர் சாலை எம்.ஜி. நகரைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக்கோழி மற்றும் பிராய்லர் கோழிப்பண்ணைகளை நடத்தி வருகிறார்.

மேலும், கோழித்தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகிறார். இவர், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது அலுவலகம் நாமக்கல்லில் திருச்சி பிரதான சாலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை வரை சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலையில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை

இதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள தனியார் கறிக்கோழி நிறுவனத்தில் நேற்று காலை வருமானவரித் துறை துணை ஆணையர் பெர்னாண்டோ தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகக் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிறுவனத்துக்குச் சொந்தமான பண்ணை இல்லம், கார்ப்பரேட் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்தது. நேற்று மாலை வரை சோதனை தொடர்ந்தது. கோவையில் உள்ள தனியார் கறிக்கோழி நிறுவனத்தின் 2 அலுவலகங்களிலும் நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும், அவினாசி சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் 6-வது தளத்தில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பந்தய சாலை பகுதியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Facebook Comments Box